Wednesday, 20 December 2017

`படம் 100 நாள் ஓடின பிறகுதான் டென்ஷன் வந்தது!' - கே.பாக்யராஜ்

கே.பாக்யராஜ் நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர்... எனப் பன்முகத்தன்மை கொண்ட மிகச் சிறந்த ஆளுமை. சீரியஸான  பல விஷயங்களை இயல்பான நகைச்சுவையுடன் சொல்வது இவரது தனித்தன்மை. இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த திரைக்கதையாசிரியர்களில் இவரும் ஒருவர். இவரது திரைக்கதைக்காகவே பல படங்கள் இந்தியில் வெற்றி பெற்றன. இவர் தனக்கு ஸ்ட்ரெஸ் எதனால் எற்படும், அதற்கு அவர் என்னவிதமாக ரிலீஃப் தேடுவார் என்பதைப் பற்றி விவரிக்கிறார் இங்கே...
''குழந்தையாக இருந்தவங்க குழந்தையாகவே இருந்துட்டோம்னா, நமக்கு பிரச்னையில்லை. வளர ஆரம்பிச்சிட்டாலே, 'எனக்கு இது வேணும் எனக்கு அது வேணும்'னு கேட்க ஆரம்பிச்சிடுவோம். அங்கேயே நமக்கு ஸ்ட்ரெஸ் ஆரம்பிச்சிடுது. 

நாம் கேட்டதை நம்ம அப்பா வாங்கித் தருவாரா, அம்மா ஏதாவது சொல்வாங்களா, வாத்தியார் எதாவது சொல்லுவாரோனு நினைக்க ஆரம்பிச்சோம் பாருங்க. அப்பவே டென்ஷன் ஆரம்பிச்சிடுச்சு. சில பேர் அது கிடைக்கலேன்னாலும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டு, 'சரி ஓகே'னு போயிடுவாங்க. சில பேர் அதையே நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. 
  

நான் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருந்தேன்னா, `ஒண்ணு நடந்துடுச்சுன்னா அதையே ஏன் நெனைச்சுக்கிட்டு இருக்கே. அப்படி இருக்கிறதாலா என்னாகப் போகுது? அதுல இருந்து வெளியில வர்றதுக்கு என்ன வழினு யோசி’னு சொல்லுவாங்க. 
சின்ன வயசுல சினிமாவுக்குப் போகக் கூடாதுனு வீட்டுல சொல்லுவாங்க. ஆறு மணி ஷோவுக்குப் போயிட்டு வந்தாலே, ராத்திரி மணி பத்தரை ஆகிடும். ஆனா, அதையும் மீறி, அடிக்கடி நைட் ஷோ போயிடுவேன். 
படம்விட்டு வீட்டுக்கு வர்றப்போ மெயின் ரோடு வரைக்கும் லைட் இருக்கும். அங்கேயிருந்து கோவை பாரதிபுரத்துல இருக்கிற எங்க வீட்டுக்குப் போகணும்னா அங்க லைட் இருக்காது. கும்முனு இருட்டா இருக்கும். ஒண்ணும் தெரியாது. பேய், பூதம்னு சொல்லிவெச்சிருப்பாங்க, இல்லையா. ரொம்ப பயமா இருக்கும். அப்போ அது பெரும் டென்ஷனாக இருக்கும். 
அதுக்காக அங்கேயேவா இருக்க முடியும்? ஏதாச்சும் பாட்டு பாடிக்கிட்டுப் போய் சேர்ந்துடுவோம்னு பாடிக்கிட்டே வீட்டுக்குப் போயிடுவேன்.

சினிமாவுக்கு வந்ததுக்கப்புறம் அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்க்கும்போது ஏற்படுற டென்ஷன்... அது ஒரு பக்கம் இருந்தாலும், புரொட்யூஸர் கிடைக்கறது இருக்கு பாருங்க... அதுதான் பெரிய டென்ஷன். 

நாம சொல்ற கதை தயாரிப்பாளருக்குப் பிடிக்கணும். தயாரிப்பாளருக்குப் பிடிச்சாலும், அடுத்து ஹீரோவுக்குப் பிடிக்கணும். இப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட 'அருவி' படம் பார்த்தேன். அப்படிப்பட்ட வித்தியாசமான கதையை ஏத்துக்கிட்டு தயாரிப்பாளர் தயாரிக்கிறதுதான் பெரிய விஷயம். என் விஷயத்துல நான் `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வேலை பார்க்கும்போதே, எனக்கு படம் இயக்க வாய்ப்பு வந்துச்சு. நான்தான் இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டு பண்ணலாம்னு தள்ளிப்போட்டேன். அதுக்கப்புறம் எங்க டைரக்டர் மூணாவது படம் ஆரம்பிச்சிட்டார். அப்புறம் நாலாவது படம் `புதிய வார்ப்புகள்’ல என்னையே ஹீரோவாக்கிட்டார். 

நான் தனியா படம் பண்ணும்போது டென்ஷன் இல்லாமதான் 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தை இயக்கினேன். இளையராஜாவின் அறிமுகம் இருந்தாலும், கங்கை அமரனே போதும்னு ரொம்ப ரிலாக்ஸாகத்தான் பண்ணினேன். அதனால எனக்கு யாருகிட்ட கதை சொல்லி ஓ.கே வாங்கணும்கிற டென்ஷனும் இல்லை. படம் டைரக்ட் பண்ணும்போதும் சிரமம் இல்லை. ஆனால், அந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் எனக்குக் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட்டுச்சு.
அதன் பிறகு நான் இயக்கிய 'ஒருகை ஓசை', 'மௌன கீதங்கள்', 'இன்று போய் நாளை வா', 'விடியும் வரை காத்திரு'னு தொடர்ந்து வெற்றி பெறவும்தான் டென்ஷனானேன். அதுக்கப்புறம், 'அந்த 7 நாட்கள்' படம் பண்ணும்போதுதான் டென்ஷன் குறைய ஆரம்பிச்சுது.

'முந்தானை முடிச்சு' நாங்க எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வெற்றி. அது ஒரு நூறு நாள் படமாகத்தானிருக்கும்னு நெனைச்சோம். ஆனா, ஊரு ஊருக்கு குடும்பங்கள் வண்டி கட்டிக்கொண்டு போனதைப் பார்த்தபோது ரொம்ப சந்தோஷமாகவும் டென்ஷனாகவும் இருந்துச்சு..  

ஒவ்வொரு முறையும் கடைசியா வந்த எனது படத்தை எனது அடுத்த படம் தாண்டிடணும்னு ஒரு பெரிய ரிஸ்க் ஏற்பட்டுச்சு.  அதுக்காக கதை பண்ணும்போது காட்சிகள் சிறப்பா வரணும்ங்கிறதுக்காக மண்டைய உடைச்சிக்குவோம். 'மற்றவங்க சிரிக்கிறதுக்காக நாம கதவைச் சாத்திக்கிட்டு அழவேண்டி இருக்கு' என்று என் அசிஸ்டென்ட்களிடம் வேடிக்கையாகச் சொல்வேன். 
நான் பாரதிராஜா சார்கிட்ட இருந்து வந்ததால, இன்னிக்கு ஷூட்டிங்குல என்ன எடுக்கணும்னு மனசுலயே ஒரு கணக்குப் போட்டு ஷூட் பண்ண ஆரம்பிச்சிடுவேன். டயலாக்கூட ஸ்பாட்டுல போய்தான் எழுதுவேன்.

 'தூறல் நின்னுப் போச்சு' படத்துல சுலக்‌ஷனா வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டு திரும்ப வீட்டுக்கு வந்ததும்,  சுலக்‌ஷனாவோட அப்பா செந்தாமரை கேட்பார். 'ஏண்டி... அவ வாசப்படி மட்டும்தான் தாண்டினாளா, இல்லை வயித்தையும் நிரப்பிக்கிட்டு வந்துட்டாளானு கேளுடி'ம்பார். 
சுலக்‌ஷனாவும் அவங்க அம்மாவும், 'அய்யய்யோ'னு அப்படியே ஷாக் ஆகிடுவாங்க. 'ஏங்க அவ நம்ம பொண்ணுங்க’னு சொல்லி டயலாக் பேசுவார். சுலக்‌ஷனா போயி எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து அது மேல நின்னுடுவாங்க. 
இப்படி எல்லா சீனும் எடுத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, இதுக்குப் பதில் தர்ற மாதிரி செந்தாமரை பேசுற டயலாக் மட்டும் தோணவே இல்லை. நானும் இங்கிட்டு அங்கிட்டு நடந்துக்கிட்டுப் போறேன். டயலாக் தோணவே இல்ல. சிகரெட்டா பத்தவெச்சுக்கிட்டு இருக்கேன். எதுவும் தோணவே இல்லை. 

கடைசியில, ஷாட் ரெடி பண்ணச் சொல்லிட்டேன். லைட்டிங் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. கவுன்ட்டர் டயலாக் சொல்லணும்.. 'யாருடி பைத்தியக்காரியா இருக்கே... அத்துக்கிட்டுப்போற மாடு தெற்கு வடக்குனு பார்த்துக்கிட்டா ஓடும்?'னு டயலாக் வெச்சேன். எனக்கும் பெரிய சேட்டிஸ்பேக்‌ஷன். யூனிட்லயும் பாராட்டுனாங்க. தியேட்டர்லயும் அந்த டயலாக் கிளாப்ஸ் வாங்கிச்சு.
எங்களை மாதிரி சினிமாக்காரங்களுக்கு நாம கிரியேட் பண்ற விஷயம் சரியா ஜனங்களுக்குப் போய்ச் சேரணும்னு ஒரு ஸ்ட்ரெஸ் இருந்துகிட்டேதான் இருக்கும்" என்றவரிடம், "உங்களுடைய  ஸ்ட்ரெஸ் ரிலீஃப்க்கு என்ன பண்ணுவீங்க?" எனக் கேட்டோம். 

''ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்கும்.ஒரு சிலருக்கு கார்ட்ஸ் ஆடுறது பிடிக்கும். ஒரு சிலருக்கு ரேஸுக்குப் போறது பிடிக்கும். எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்பப் பிடிக்கும். புத்தகப் புழுவாக இருப்பேன். எப்போ வெளியூர் போனாலும் சூட்கேஸ்ல புக்ஸ் எடுத்துக்கிட்டுப் போவேன்.
அப்புறம் `பாக்யா’ பத்திரிகைக்காக வித்தியாசமான நிறைய புத்தகங்கள் படிப்பேன். அந்த அனுபவம் என் வாழ்க்கைக்கும் பயன்படுது" என்றவரிடம்,  'நடிகர், இயக்குநர், பத்திரிகையாளர், இயக்குநர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் எனப் பலவித வேலைகளை எப்படி பேனல்ன்ஸ் பண்ணிக்கிறீங்க?' என்று கேட்டோம்.
நமக்குப் பிடிச்ச வேலையை லயிச்சு செய்யும்போது நமக்கு அலுப்பே வராது. நேரம் போறதே தெரியாது. வேலையை வேலையா நெனைச்சா ஸ்ட்ரெஸ் தானா வந்துடும். சினிமாவைப் பொறுத்தவரை அதை நான் வேலையா நெனைக்கிறதில்லை'' என்று கூறி விடைகொடுத்தார்.

Wednesday, 22 November 2017

’பத்மாவதி’ திரைப்படத்தில் அப்படி என்னதான் பிரச்னை?..எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள்-

சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும், எதிர்ப்பும் வலுத்துக்கொண்டே போகிறது.


பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், ராஜ்புத் வம்சத்தின் ராணி பத்மாவதியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டு உள்ளது. இதில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராஜ்புத்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்த படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ராஜ்புத் மக்கள் அதிகம் வசிக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பா.ஜ.க ஆதரவு இயக்கங்கள் இந்தப்போராட்டத்தில் முன் நின்று நடத்துகிறார்கள். படத்தின் இயக்குநர் பன்சாலி, நடிகர்கள் ரன்பீர் கபூர், தீபிகா படுகோனுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் படத்திற்கு எதிர்ப்பும் ,ஆதரவும் வலுத்துவருகிறது. தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் திரைப்படத்தை தங்கள் உயிரைக் கொடுத்தாவது தடை செய்வோம் என்று ராஜ்புத் கார்னி சேனா என்கிற அமைப்பு தீவிரமாக இயங்கி வருகிறது. இந்தப்படத்தை வெளியிட்டால் தீபிகாவின் மூக்கை அறுப்போம் என்றும் சபதம் எடுத்துள்ளனர். இந்தப்படத்தில் அப்படி என்ன தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது?தீபிகாவின் கூமார் நடனம்


ராஜஸ்தான் திருமணங்களில் ஆடப்படும் 'கூமார்'எனும் நடனத்தை அரச குலப்பெண்கள் ஆடமாட்டார்கள். ஆனால், திரைப்படத்தில் ராணியாக வரும் தீபிகா அந்த நடனத்தை ஆடுவது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. உடலை மறைத்து ஆடவேண்டிய நடனத்தில் தீபிகா இடுப்பு தெரியும்படி ஆடி இருக்கிறார் அது தங்கள் மனதை புண்படுத்துவது போல இருக்கிறது என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

பத்மாவதியோடு அலாவுதீன் கில்ஜி


எப்படியாவது பத்மாவதியை அடையவேண்டும் என்று நினைக்கும் வில்லனான அலாவுதீன் கில்ஜி கனவில் நெருக்கமாக அவரோடு ஆடிப்பாடும் படியான, பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பேரில் இதுபோன்ற தவறான காட்சிகளை மக்கள் மனதில் விதைக்கப்பார்க்கிறார்கள் என்றும் இயக்குநர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு


ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் கோட்டைகளில் ராஜ்புத்களிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாகவும், அதனை தட்டிக்கேட்க சென்ற தங்களை தகாத முறையில் பேசி அவமதித்ததால் தான் பிரச்னை நடந்ததாகவும் கார்னி சேனா அமைப்பு கூறுகிறது. மேலும், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தச்சென்றவர்களையும் முறையாக நடத்தவில்லை என்று அவர்கள் இயக்குநர் மீது புகார் கூறுகிறார்கள்.

வட இந்தியாவில் அரச குடும்பம்


ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இன்னமும் அரச குடும்பத்தினருக்கு அதே மரியாதை வழங்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் வசுந்தர ராஜே குவாலியர் அரச குடும்பத்தில் பிறந்து, தோல்பூர் அரச குடும்பத்தின் மருமகளாக இருக்கிறார். ஒரு அரச குடும்ப வாரிசு ஆளும் மாநிலத்தில் ஒரு ராணியை எப்படி தவறாக சித்தரிக்கலாம் என்கிற அவர்களின் வாதமே தற்போது பிரதானமாக இருக்கிறது. இதனால் தான் அந்த திரைப்படம் எதிர்ப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Sunday, 19 November 2017

சினிமாவால் ஒருபோதும் புரட்சி ஏற்பட்டுவிடாது!

திரைப்படங்கள் ரசிகர்களின் மூளைக்குள் ஊடுருவி ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. அவை சமூகம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்டாலும், அதற்காக முன்வைக்கும் தீர்வுகளின் வழியாக, மாற்று சிந்தனைக்கான வழிகளை நம் மனதுக்குள் விதைக்கவல்லவை. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் சாமானியர்களின் கலகக்குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெகுஜனத்தைப் பாழாக்கும் வணிக அறிவியலை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கும் அந்தப் படத்தின் இயக்குனர் கோபி நயினார் நம்மிடம்,


முதல் படத்திலேயே அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் எதிர்க்கும் ஒரு அரசியல் படத்தை எடுத்திருப்பதற்கு காரணம் இருக்கிறதா?
மக்களுக்கான படைப்பு என்பது மிகப்பெரிய எதிர்ப்பு நிலையில் இருந்துதான் உருவாகும். இது நீரையோ, விவசாயத்தையோ பற்றிய கதை கிடையாது. ஆனால் நீர், விவசாயம் ஆகியவற்றைச் சார்ந்திருப்பதால் ஏற்படுகிற மிகப்பெரிய பிரச்சனைகளைப் பேசியிருக்கிறோம். அதனடிப்படையில்தான் கதையும் வடிவமைப்பட்டது.
ஒரு கதாநாயகியை அரசியல் பேச வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன?
உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட இனமாக பெண்கள்தான் இருக்கிறார்கள். நீதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்த ஒரு பெண் நீதி பேசினால், அதுதான் பொது நீதியாக இருக்கும் என நம்புகிறவன் நான். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு அரசியல் நீதியை வழங்குகிற தகுதி பெண்ணுக்கு மட்டுமே இருப்பதாகவும் நான் நம்புகிறேன். அதனால்தான், இந்தக் கதை முழுக்க அந்தக் கதாப்பாத்திரம் நிறைய நீதி பேசும்.
படத்தில் ‘நீங்கள் அரசுக்கான அதிகாரியா? அரசுக்கு எதிரான அதிகாரியா?’ என ஒருவர் கேட்கிறார். அப்படியென்றால், மக்களுக்கான அதிகாரிகளை, அரசு வேலை செய்யவிடாமல் தடுக்கிறதா?
நாம் வாழுகிற இந்த நாடு, வணிக சந்தைகளால் கட்டமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நாட்டை அடிமையாக்கி, பின் விட்டுச் சென்றாலும், ஒரு நாட்டை எப்படி ஆளவேண்டும் என்பதற்கான யுக்தியை மிகப்பெரிய வணிகர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டது. 1947ஆம் ஆண்டு நாம் விடுதலை பெற்றுவிட்டோம் என்று சொன்னாலும், வணிகர்களிடத்தில் இருந்து நாம் இன்னமும் விடுதலை பெறவில்லை. வணிகர்கள்தான் இந்த நாட்டின் மொத்த அரசையும் தீர்மானிக்கும் நபர்களாக இருக்கிறார்கள். சீரழிந்துவிட்ட இந்த நாட்டை செப்பனிடுவதற்கு எவ்வளவு பெரிய அதிகாரிகள் மனிதநேயத்தின் அடிப்படையில் வந்தாலும், வணிகர்களுக்கு எதிராக நடந்துவிட்டால் அவர்களை அரசுக்கு எதிரானவர்களாக வரையறுத்துவிடுவார்கள். இந்த நாடு நமக்கானது என மக்கள் நினைத்துக்கொண்டு ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அப்படி தேர்ந்தெடுத்த மக்களையே இந்த அரசு ஒடுக்குகிறது. ஒருவேளை ஜனநாயக அடிப்படையில் அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையென்றால், அரசு மக்களை நேரடியாகவே தாக்கும். அதைத்தான் படமும் சொல்லும்.
‘எந்தத் தலைவனும் இங்கு வரப்போவதில்லை’ எனச் சொல்லும் வசனமும் அதற்காகத்தானா?
இதுவரைக்கும் வரவில்லை என்பதுதானே உண்மை. நிறையபேர் தலைவர்களாக வந்தார்கள். ஆனால், அவர்களை யார் அனுப்பினார்களோ, அந்தக் கட்டமைப்பிற்கான வியாபாரத்தை முடித்துவிட்டு போய்விட்டார்களே.
இன்றைய அரசியல் சூழலில் அறம் அரசுக்கு எதிரான படமாக இருக்கிறதே?
யாருக்கும் எதிரானது கிடையாது இந்தப்படம். ஆனால், மிகப்பெரிய மாற்றத்தை இந்தப்படம் ஏற்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். யார் எதிரி என்று சொல்கிறீர்களோ, அவர்களையே நாம் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களை மாற்றியமைக்காமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது.
மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகத்தானே அரசு பல திட்டங்களைக் கொண்டுவருகிறது. அந்தத் திட்டங்களை மக்கள் விரோதம் என சொல்லிவிட முடியுமா?
தொழிற்சாலைகள் மட்டும்தான் வேலையைத் தரமுடியுமா? அப்படியென்றால் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் விவசாயத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பைத் தருமென்றால் அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லையா? அந்த உற்பத்தி என்னை நோயாளியாக்கி, மருத்துவம் என்கிற இன்னொரு வணிகத்தின் மூலமாக என் உயிரைக் குடிக்கும் என்றால், அந்த உற்பத்தி எது என்ற கேள்வியை எழுப்புவது நியாயம்தானே? இந்த நாட்டில் விவசாயம் அழிந்துபோகவில்லை. ஆனால், அதைச் செய்வதற்கான ஆதாரங்கள் வேலைவாய்ப்பு, உற்பத்தி போன்ற பல காரணங்களைச் சொல்லி அபகரிக்கப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில்தான் ஒரு விவசாயி அநாதையாக்கப்பட்டிருக்கிறான்.
சினிமா எனும் பொழுதுபோக்கு தளத்தில் ரஜினி, விஜய், நயன்தாரா என யாரை வைத்து அரசியல் பேசினாலும் அதுவும் வணிகமாகத்தானே மாறுகிறது?
ஒரு பிராண்ட் எப்போதும் போராட்டமாக இருக்க முடியாது, ஒரு போராட்டம் நிச்சயம் பிராண்டாகவும் இருக்கமுடியாது. நீங்கள் சொன்ன எல்லோருமே பிராண்டாக இருக்கும்போது, எப்படி போராட்டமாக மாறும் என்று கேட்கும் கேள்வி நியாயமானது. நாம் ஒரு காரியத்தைச் செய்யும்போது, நம்முடைய பொருளை ஒரு நுகர்வோர் அதை வாங்கிக் கொள்ளாமல், ஆதரவாளராக மாறவேண்டும். என் பேச்சைக் கேட்டு ரசிக்கத் தொடங்கினால் அது நுகர்வாகிவிடும். அதற்குப் பதிலாக தடியை எடுத்துக்கொண்டு போராடக் கிளம்பினால், அவர்களை நான் போராளிகளாக மாற்றிவிட்டேன் என்று அர்த்தம். அதேசமயம், சினிமாக்களால் புரட்சி ஏற்பட்டுவிடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். புரட்சியை மக்களாலும், அரசியலாலும், தியாக உணர்வுள்ள உன்னதமான தலைவர்களாலும் மட்டுமே செய்யமுடியும். ஆனால், ஒரு கலைஞனால் அந்தப் போராட்டத்திற்கான கலகத்தை ஏற்படுத்த முடியும்.

Thursday, 19 October 2017

பிரசாந்துக்கு ஜோடியான சஞ்சிதா ஷெட்டி

ஒருகாலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். விஜய், அஜித் போன்ற நடிகர்கள் எல்லாம் பார்த்து பயப்படும் அளவுக்கு ஹிட் படங்கள் கொடுத்தவர். ஆனால், அவருக்கு தற்போது மார்க்கெட் சுத்தமாக இல்லை. இருந்தாலும், ஹீரோவாக நடித்தே தீருவேன் என்று சொல்லி சொந்தக் காசை செலவழித்து வருகிறார்.தற்போது ‘ஜானி’ என்ற படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த். ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிச் செல்வன், இந்தப் படத்தை இயக்குகிறார். பிரசாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை, பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். பிரபு, ஆனந்தராஜ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹிந்தியில் வெளியான ‘ஜானி கட்டார்’ என்ற படத்தின் ரீமேக் இது.

Wednesday, 18 October 2017

மெர்சல் சினிமா விமர்சனம்

கரு : எல்லோருக்கும் இலவச மருத்துவமும் கல்வியும் கிடைக்க வேண்டும் .அல்வாறு கிடைக்கவில்லை... எனில் மருத்துவத்துறை தில்லாலங்கடி தகிடுதித்தங்களை தவிர்க்க வே முடியாது ... எனும் கருத்தை கருவாக கொண்டு வெளி வந்திருக்கும் திரைப்படம்.. கதை : இரண்டு விஜய்கள் ஒருவர் மாறன் , ஒருவர் வெற்றி முன்னவர் உலகமே திரும்பி பார்க்கும் ஐஞ்சு ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் , பின்னவர் அதே உலகம் வியந்து பார்க்கும் மேஜிக் நிபுணர். சமூகத்துக்கு நல்லது செய்யும் டாக்டர் மாறனுக்கு மருத்துவ துறையில் எதிராக கிளம்புபவர்களை எல்லாம் சத்தமில்லாமல் சாமர்த்தியமாக டாக்டர் விஜய்க்கே தெரியாமல் ., தட்டி கொட்டி பட்டி பார்த்து டிங்கரிங் பார்க்கிறார். இது பார்த்து போலீஸ் பொத்திக் கொண்டு இருக்குமா ? ஆக்ஷனில் இறங்குகிறது. மாறன்- விஜய், அஞ்சு ரூபாய்க்கு வைத்தியம் பார்க்க காரணம் என்ன ? அவருக்கு மேஜிக் வெற்றி -விஜய் உதவகாரணம் என்ன ? அதில் இரண்டு விஜய்க்கும் என்ன சம்பந்தம் ? என்பது போலீஸுக்கும் படம் பார்க்கும் நமக்கும் தெரிய வருகிறது. அதன் பின்னணி ப்ளாஷ்பேக்கில் நம் ஊருக்கே நல்லது நினைக்கும் தளபதி விஜய்யும் வருகிறார். அப்புறம் ? அப்புறமென்ன ....? அப்பாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தவர்களை பிள்ளைகள் பழி தீர்க்கின்றனர். கூடவே, இந்தியா முழுமைக்கும் இலவச மருத்துவம் என்ற கோரிக்கையும் மூன்று விஜய்களின் காதல் கண்ணாமூச்சிகளையும் கலந்து கட்டி கலர்புல்லாக "மெர்சலை "கலக்கலாக கதையாக்கி , களப்படுத்தியிருக்கின்றனர். 

காட்சிப்படுத்தல் : ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அட்லியின் கதை , இயக்கத்தில் , விஜய் , காஜல்அகர்வால் , சமந்தா, நித்யா மேனன் , வடிவேலு , சத்யராஜ் , எஸ்.ஜே.சூர்யா , சங்கிலி முருகன் , கோவை சரளா, தேவதர்ஷினி , சத்யன் , காளி வெங்கட் , நான் கடவுள் ராஜேந்திரன் , யோகி பாபு ., செவ்வாளை , தவசி ... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க ., டிஎஸ்எல் எனப்படும் தேனாண்டாள் பட நிறுவனம் தயாரிக்க வெளி வத்திருக்கும் "மெர்சல்" படத்தில் , பெரிதாக வளர்ந்துவரும் மருத்துவ துறை ஊழல் சுளை மிரள வைக்கும் விதத்தில் மிக அழகாக காட்சப்டுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. 

கதாநாயகர் : டாக்டர் மாறனாக , மேஜிக் நிபுணர் வெற்றியாக, இவர்களது அப்பா தளபதி வெற்றி மாறனாக மூன்று விஜய்கள். மூவருமே செம "மெர்சல் ." "நான் பேசுற பாஷையும் போட்டு இருக்கிற டிரஸ்ஸும் தான் உங்க பிராபளம்ன்னா மாற வேண்டியது நான் இல்ல .. நீங்க தான் ", என்று வேட்டி சட்டையில் பாரிஸில் வெள்ளைக்காரனிடம் "பன்ச் " அடிப்பதில் தொடங்கி ., "எப்பலாம். நாம பெரிய ஆளுன்னு நம்ம தலையில கணம் ஏறுதோ ..... அப்போல்லாம் ஏர்போர்ட் வந்தா போதும் நாம ஒரு சாதாரணம்ன்னு அவங்க செக்கிங் ல சொல்லாம சொல்லிடுவாங்க ...."இப்படி உண்மையை நான் சொல்லலை ... ஷாருக்கான் சொல்லி இருக்கார்... என்றெல்லாம் டாக்டர் விஜய் 'பன்ச் 'அடிப்பது ஆகட்டும், "தோ பாரு தப்புன்னு தெரிஞ்சா கழட்டி வைக்க வேண்டியது ... உன் மனசாட்சிய இல்ல ...." உன் காக்கி சட்டய ... " என்றும் ,"ஒரு குழந்தை உருவாக பத்து மாசம் , ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம் அதே ,ஒரு டாக்டரோ , என்ஜினியரோ உருவாக நாலு வருஷம் தேவைப்படுது .ஆனா , ஒரு தலைவன் உருவாக ஒரு யுக மே தேவைப்படுது ...." என்றும் பிற விஜய்கள் பேசும் வசனங்களும் சரி ., அதே மாதிரி , மேஜிக் விஜய் செய்யும் சாகசங்கள் ஆகட்டும் , அப்பா தளபதி விஜய் மல்யுத்த வீரராக காட்டும் முரட்டு தனத்தில் ஆகட்டும் மூவருமே மிரட்டல் மெர்சல் .அதுவும் ரொமான்ஸில் அப்பா 
விஜய் கூடுதல் மெர்சல். 

கதாநாயகியர் : டாக்ட​ர் மாறனின் டாக்டர் ஜோடி அனு பல்லவியாக காஜல்அகர்வால் , டி.வி.நிருபர்'கம்'காம்பயர் தாராவாக சமந்தா ஐஸ்வர்யாவாக நித்யா மேனன் உள்ளிட்ட மூவரில் முன்னவர், இரண்டாமவரைக் காட்டிலும் மூன்றாமவர் நித்யா மேனனுக்கு தான் வெயிட்டான ரோல் அதை அவர் அசத்தலாக செய்திருக்கிறார் ." என் புருஷன் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு ல அடங்காத ஒரே காளை.... வாடிவாசல் திறந்ததுமே வந்துடுவார் பாரு ..... என்று புருஷன் தளபதி விஜய்யை தூக்கி பேசும் இடங்களில் அம்மணி அசத்தல். 

காமெடியன் : இரண்டு மகன் விஜய்களுக்கும் உதவும் கம்பவுண்டராக வடிவேலுவும் அவரது காமெடிகளும் கச்சிதம் . அதிலும் பாரீஸில் கொள்ளையர்களிடம் "ஐ யம் இண்டியா அங்க இப்போ டிஜிட்டல் மணி சோ நோ மணி ......"எனும் வடிவேலு. . காமெடி மெர்சல். 

வில்லன் : வில்லன் மருத்துவர் டேனியல் ஆரோக்கியராஜாக எஸ்.ஜே.சூர்யா செம்ம மெர்சல். 

பிற நட்சத்திரங்கள்: காவல் அதிகாரியாக சத்யராஜ் , மேஜிக் விஜய்யின் தத்து அப்பா 'கம் 'வித்தைக் காரராக சங்கிலி முருகன் , தத்து அம்மாவாக கோவை சரளா, தேவதர்ஷினி , ஷிவானி ,சத்யன் , காளி வெங்கட் , நான் கடவுள் ராஜேந்திரன் , யோகி பாபு ., செவ்வாளை , தவசி ... என படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர். 

தொழில்நுட்பகலைஞர்கள் : 
ஜி.கே.விஜய் ரூபனின் ஒளிப்பதிவு மூன்று விஜய்க்குமான வித்தியாசங்களை பின்னணியிலும் பேசி இருப்பது படத்திற்கு பெரும் பலம் . 

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் "ஆளப் போறான் தமிழன்..." ,"ஏய் அட்ரா மெர்சலு ....", "நீ தானே நீ தானே ... " "என் நெஞ்சைத் தட்டும் சப்தம்...." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் இசை மெர் சல் . 

பலம் : மூன்று விஜய்களும் , அவர்களது பாத்திர பின்னல்களும் இப்படத்திற்கு பெறும் பலம். 

பலவீனம் : 2 மணி 50 நிமிட சற்றே , நீண்டப் பட மென்பதும், கோவை சரளா விஜய்யின் தத்து தாய் ஆன கதை விளக்கப்படாததும் கொஞ்சம் பலவீனம் . 

இயக்கம் : அட்லியின் எழுத்து , இயக்கத்தில், கொஞ்சமே கொஞ்சம் ரஜினியின் "மூன்று முகம் " பட சாயல் ஆங்காங்கே தெரிந்தாலும்., "இப்போ சிசேரியன்னா நீ ஷாக் ஆகுறல்ல... இன்னும் 30 வருஷம் கழிச்சு நார்மல் டெலிவரின்னா எல்லோரும் ஷாக ஆவாங்க..." , " சிங்கப்பூர்ல ஏழு சதவிகித ஜிஎஸ்டி தான் கல்வி , மருத்துவம் இலவசம் , ஆனா 25 சதவிகிதம் , ஜிஎஸ்டி வாங்குற இந்தியாவுல இவை செம காஸ்ட் லீ ., அதே மாதிரி நம்மூர்ல ,உயிரை கொல்லுற மதுவுக்கு ஜிஎஸ்டியே கிடையாது. ஆனா மருந்துக்கு 12 சதவிகிதம் ஜி எஸ் டி யாம் ...." என்பது உள்ளிட்ட கருத்தாழ மிக்க வசனங்களுக்காகவும் மருத்துவ துறையில் மலிந்து கிடக்கும் கொடூரங்களை தோலுரித்துக் காட்டியிருக்கும் விதத்துக்காகவும் "மெர்சலை " கொண்டாட வேண்டும். 

மேலும் ,"நம்ம வீட்டு டி.வி.ல பாரின் ல நீ பேசுன பேச்சோட உன்ன காட்டினாங்க கண்ணு ..நல்லா எம் ஜி ஆர் கணக்கா .... தாதளன்னு இருக்க கண்ணு ... "எனும் சரளாவிடம் ., "அம்மா ,நம்ம வீட்டு டி.வி. சரியில்லன்னு நினைக்கிறேன் அத மாத்தனும் ... " என்று விஜய்யை எம் ஜி ஆருடன் ஒப்பிடுவதை விஜய் விரும்பாத மாதிரி விரும்பும் காட்சிகளும் , "அண்ணன் வாத்தியார் மாதிரி 3 அடி வாஙகிட்டுத் தான் திருப்பி கொடுப்பாரு பாரு ....." என்றெல்லாம் பில் - டப் கொடுத்து விஜய் நிற்கும் போது நடக்கும் போதெல்லாம் பின்னணி யில் பில் -டப் பாக எம் ஜி ஆர் படங்களோ பாடல்களோ ஒளி, ஒலிக்கப்படுவதற்கு காரணமான இயக்குனர் அட்லி விஜய் ரசிகர்கள் இதயத்தில் இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருப்பார்.... என்பதும் நிதர்சனம். பிற ரசிகர்களையும் அட்லி ., ஏமாற்றவில்லை என்பது ஆறுதல்'. 

பைனல் "பன்ச் " : ஆக மொத்தத்தில் ., "மெடிக்கல்' துறை குறைகளை, கொள்ளைகளை சுட்டி காட்டி குத்தி கிழித்திருக்கும் 'மெர்சல்' - மிரட்டல் !"

Tuesday, 17 October 2017

'நமீதாவை நான் பார்த்தே ரெண்டு வருசமாச்சு' - திருமண வதந்தி பற்றி நடிகர் சரத்பாபு

கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்தவர் குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதா. 'எங்கள் அண்ணா', 'ஏய்', 'பில்லா', 'அழகிய தமிழ்மகன்' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


உடல் எடை அதிகரித்ததால் தொடர்ந்து சரியான படவாய்ப்பு இல்லாமல் இருந்துவந்தார். இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர், ஒருசில வாரங்களிலேயே பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், இவருக்கும் மூத்த நடிகரான சரத்பாபுவிற்கும் திருமணம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தத் தகவல் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பரவியது.

லிவ் இன் ரிலேசன்ஷிப்


மூத்த நடிகர் சரத்பாபுவும், நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்வதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

கேவலமான சந்தேகம்


சரத்பாபுவிற்கும் நமீதாவுக்கும் விரைவில் திருமணம் எனும் இந்தச் செய்தி குறித்து நமீதா தரப்பில் மறுப்பு அளிக்கப்படாமல் இருந்தது. பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டு கேட்டதற்கு, 'ஏன் உங்களுக்கு இப்படிப்பட்ட கேவலமான சந்தேகங்கள் எல்லாம் வருகிறது?' எனக் கேட்டாராம்.

வதந்தி தொடர்கிறது


இதுகுறித்து நடிகர் சரத்பாபு, 'கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இது எனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது' என்று கோபமாகப் பேசியுள்ளார்.

ரெண்டு வருசமாச்சு


'நமீதாவை நான் பார்த்தே ரெண்டு வருசமாச்சு. அவருடன் இனிமேலும் இணைத்துப் பேசுவது இருவரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார் சரத்பாபு.

Sunday, 15 October 2017

ஓவியாவுக்கு ரொம்ப பிடித்தவர் யார்? பிடிக்காதவர் யார்?

பொதுவாக எந்த நடிகர், நடிகையிடம் பேட்டி எடுத்தாலும் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? நடிகை யார்? என்ற கேள்வி இருக்காமல் அந்த பேட்டி முழுமை அடையாது. அதேபோல் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓவியாவின் பேட்டியிலும் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் கூறிய பதில் ஓவியா உண்மையிலேயே வித்தியாசமானவர் தான் என்பதை உறுதி செய்தது. அவர் கூறிய பதில் இதுதான்:


எனக்கு எந்த நடிகரையும் பர்சனலாக தெரியாது. அதனால் அவர் எனக்கு பிடித்தவரா? பிடிக்காதவரா? என்பதை சொல்ல முடியாது. படப்பிடிப்பின்போது ஒருவர் நல்லா பழகினால் அவரை எனக்கு பிடிக்கும். அதற்காக அவர்தான் எனக்கு ரொம்ப பிடித்தவர் என்று கூற முடியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமல் சாரை எனக்கு ரொம்ப பிடித்தது. ஆனாலும் அவரை பற்றி எனக்கு பர்சனலாக தெரியாது' என்று கூறினார்.
அதேபோல் தனக்கு பிடிக்காதவர்கள் குறித்து கூறியபோது, 'எனக்கு இந்த உலகத்தில் பிடிக்காதவர்களே கிடையாது. எல்லோர் மீதும் நான் அன்பு செலுத்துவேன். எனக்கு அதிகமாக கோபம் வரும்படி, என்னை கொலை செய்யும் வகையில் ஒருவர் நடந்து கொண்டாலும் அவர் மீது எனக்கு அந்த சமயத்தில் மட்டும் பிடிக்காது, ஆனால் மறுநாள் நான் அவரை பற்றி மறந்துவிடுவேன்' என்று கூறினார்.