Saturday 17 February 2018

சிவகார்த்திகேயன் வாழ்க்கை

தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து..., ஈஸியா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்?



ஒருவர் மிக வேகமாக வளர்ந்தால் ஒன்று சந்தேகம் வரும் அல்லது வயிற்றெரிச்சல் வரும். சிவா விஷயத்தில் இரண்டாவதுதான் அதிகம் நடந்தது. ஆனால் உண்மை என்னவென்பது சிவகார்த்திகேயனின் நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும்.
2012 சிவா எதிர் நீச்சல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 3, மெரீனா, மனம் கொத்தி பறவை என்று நடிகராக ஃபார்மாகிவிட்டார். ஆனாலும் இந்த சமூகம் அதுவரை ஒரு ஹீரோ மெட்டீரியலாக ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாவை ஜாலி பேட்டி எடுங்கள் என்று சொன்னார்கள் வார இதழில். கேள்விகளை தயாரிக்கும்போது 'நீங்க ஆர்யா மாதிரி ப்ளேபாயா? இல்லை ராமராஜன் மாதிரி கவ்பாயா?' என்று ஒரு கேள்வி ஆசிரியர் குழுவிடம் இருந்து சேர்க்கப்பட்டது. கேட்டதற்கு சிவா 'ரெண்டுமே வேண்டாம். நான் ஏரியால ஏதோ புகை போடற பாய்னு வெச்சுக்குங்க...' என்றார்.


சமீபத்தில் சிவாவை ரஜினியுடன் பார்த்தேன். 'இப்போதைய சூப்பர் ஸ்டார் ப்ளஸ் அடுத்த சூப்பர் ஸ்டார் ரெண்டு பேர் கூடவும் சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுத்துக்குறேன்' என்றேன். 'நமக்கு சூப்பர் ஸ்டார்கற பேர்லாம் வேண்டாம்ணே... அது அவர் ஒருத்தர்தான். எனக்கு சிவகார்த்திகேயன்கற பேர் போதும்' என்றார். ஆக, அவர் மாறவில்லை. நாம்தான் மாறிக்கொண்டிருக்கிறோம். சிவாவை சுற்றிலும் நின்று பார்க்கும் நாம் அவரது வளர்ச்சியை வைத்து அவரது கேரக்டரை பற்றிய பிம்பத்தை மாற்றிக்கொள்கிறோம். ஆனால் அது உண்மையில்லை.
இப்போதைய நிலையில் ஓப்பனிங்தான் ஒரு ஹீரோவின் பொசிஷனிங்கை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில் ஓப்பனிங் இருக்கும் ஹீரோக்கள் நான்கே பேர் தான். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன். எனவேதான் இந்த நான்கு பேரின் படங்களை மட்டும் எம்ஜி எனப்படும் மினிமம் கேரண்டி முறையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர் தியேட்டர் அதிபர்கள்.



இந்த வளர்ச்சிக்கு பின்னால் எத்தனை அவமானம், எத்தனை நிராகரிப்புகள், எத்தனை வேதனைகள் இருக்கிறது என்பது சிவாவை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

சிவா செடியாக இருக்கும்போது வளர வேண்டும் தண்ணீர் ஊற்றியவர்களை விட கருக வேண்டும் என்று வெந்நீர் ஊற்றியவர்கள்தான் அதிகம். ஆனால் எல்லோரையும் சிறு புன்னகையோடே கடந்துகொண்டிருக்கிறார். சிவாவின் வளர்ச்சிக்கு தான்தான் காரணம் என்று மார் தட்டிக்கொள்ள துடிப்பவர்கள் கூட சிவாவின் ஏதாவதொரு கட்டத்தில் அவரை வளரவிடாமல் செய்ய துடித்திருக்கிறார்கள். யாரிடமும் பகைமை காட்டாமல் பழி வாங்கத் துடிக்காமல் ஒரு மனிதன் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி உழைத்தது மட்டும்தான் சிவாவின் வளர்ச்சிக்கு காரணம்.
அப்பாவுக்கு சிறையில் பணி என்பதால் குற்றவாளிகளை அவர்களது தண்டனை காலத்தில் பார்த்து வளர வேண்டிய சூழல் சிவாவுக்கு. குற்றவாளிகளை தண்டனை காலத்தில் பார்ப்பது எவ்வளவு பக்குவத்தை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு ஊரில் நண்பர்கள் செட் ஆவதற்குள்ளாகவே அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் நண்பர்கள் இல்லாமல் பல நேரம் தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து, தனியாக ஃபீல்டிங் செய்து விளையாண்டிருக்கிறார். பதின் பருவம் முடிந்து கல்லூரியில் கலாடி எடுத்து வைத்த சில மாதங்களுக்குள் அப்பாவை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைமை. தனக்குள்ளே இருந்த மிமிக்ரி என்னும் திறமையை வெளிக்கொணர அவர் பட்ட பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வெறும் கைதட்டலுக்காக ஒரு மணி நேரம் மிமிக்ரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து அடுத்த இரண்டு நாட்கள் தொண்டை வலியோடு துடித்திருக்கிறார். அம்மாவிடமோ அக்காவிடமோ சொன்னால் மிமிக்ரிக்கு தடை விழுந்துவிடுமோ என்று அதையும் மறைத்திருப்பார்.

கலக்கப்போவது யாரு? டைட்டில் ஜெயித்தபிறகு அதே டிவியில் காம்பியரிங் பண்ண வாய்ப்பு வருகிறது. ஆனால் ரிஜெக்ட் செய்கிறார்கள். அன்று அவர் அடைந்த வேதனை. வளர்ந்துகொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் சம்மதித்தால் கழுத்தை நெரிக்கிறது பொருளாதார சூழல். வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அதிக கூட்டம் வந்துவிட அவர்களை சாப்பிட வைக்க அம்மாவுக்கே தெரியாமல் எங்கெங்கோ கடன் கேட்க வேண்டிய சூழல். அதை அடைக்க பட்ட பாடு... இது எல்லாமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மட்டும்தான்... சினிமாவுக்கு வந்த பின்னர் இதை போல பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
இப்போது சிவாவை சந்தோஷப்படுத்துவது ஓப்பனிங் அல்ல. அவரது மகள் ஆராதனா. மனைவி ஆர்த்தி. அம்மா, அக்கா. இந்த நால்வர்தான் சிவாவின் சந்தோஷம். கடந்த 6 ஆண்டுகளாக சிவா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றவில்லை. 'கீப் யுவர் பேரண்ட்ஸ் ஹேப்பி... லைஃப் வில் பி தெ ஹேப்பியஸ்ட்...'
சினிமாவில் பார்ட்டி நடந்தால் ஒரு ஓரமாக நின்று மற்றவர்கள் குடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டிருப்பார். அது அவர் அம்மாவுக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம்.
சிவாவின் வாழ்க்கை எப்போதுமே சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கான பாடம். உண்மையிலேயே எதிர் நீச்சல் அடித்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார் சிவா. இன்னும் எதிர் நீச்சல்தான். அது இனிமேலும் தொடரும். சிவா முன்னேறிக்கொண்டே தான் இருப்பார்.

திரைத்தொழிலின் அச்சாணியாக விளங்கிய இயக்குநர் - எஸ்பி முத்துராமன்

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று 'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் இருவர் வழமையான வாழ்க்கையையும் பொருள்பொதிந்த வாழ்க்கையும் தேர்த்தெடுத்தது குறித்த' வழக்குப்பொருள் ஒன்றைக் காட்டியது. ஒரு தரப்பினர் சமூக ஈடேற்றத்திற்கான மேம்பட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள். மற்றொரு தரப்பினர் சமூகத்திற்கு வேண்டியதைச் செய்து வாழ்கின்ற இயல்பான வாழ்முறையைத் தேர்த்தெடுத்தவர்கள். அவ்விரு தரப்பினரும் அவ்வாறு தேர்ந்தெடுத்ததைத் தற்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுக்குரிய மாந்தர்களைக்கொண்டு பேசிச்சென்றது. அந்நிகழ்ச்சிக்கு இரு தரப்பிற்கும் வந்த சிறப்பு விருந்தினர்கள் சுப வீரபாண்டியனும் எஸ்பி முத்துராமனும். இருவரும் உடன்பிறப்புகள். ஆனால், வெவ்வேறு வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்துகொண்டவர்கள். அந்நிகழ்ச்சியின் பார்வையானது சுபவீ பொருள்மிக்க வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துச் சிறப்புற்றார் என்பதைப் போன்றும், எஸ்பி முத்துராமன் வணிகப் படங்களின் இயக்குநராக வழமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார் என்பதைப் போன்றும் அமைந்துவிட்டது. எனக்கு அதில் ஒப்புதல் இல்லை. இருவரும் இருவேறு திசைகளில் தத்தமக்குரிய தேர்வின்படி ஆற்றலுடன் செயல்பட்டவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும். வானூர்தி ஓட்டுவது எவ்வளவு பொறுப்பான மதிப்பான செயலோ அதற்குச் சற்றும் குறைந்ததில்லை சென்னைப் போக்குவரத்து நெரிசலில் பேருந்து ஓட்டுவது.

எண்பதுகளின் அறிவுத் தரப்புக்கு ஒரே முகம்தான் இருந்தது. இடதுசாரி முற்போக்கு முகம். அந்தத் தரப்பில் எஸ்பி முத்துராமன் என்னும் வணிகத் திரைப்பட இயக்குநரை மிகவும் எளிமையாக மதிப்பிட்டார்கள். வெற்றி என்பது அத்துணை எளியதுமன்று. அதைத் தொடர்ந்து ஈட்டியமைக்காகத்தான் ஒருவர் அறிவுத்தரப்பின் மதிப்பீட்டுக்கே வருகிறார். இன்றுள்ள இயக்குநர்களின் படாடோபங்களைப் பார்த்தவர்கள், "முத்துராமனைப் போன்றவர்களே திரைத்தொழில் துறையின் அச்சாணியாக விளங்கினார்கள்," என்பதை ஏற்றுகொள்வார்கள். கே. விஜயன், எஸ்பி முத்துராமன் - இவ்விருவரும் இயக்கிய திரைப்படங்கள் பிசிறில்லாத செய்ந்நேர்த்தியோடு இருந்தன.


எஸ்பி முத்துராமன் எப்படிப் பணியாற்றுவார் என்பதைப் பஞ்சு அருணாசலம் தம் நூலில் வியந்து குறிப்பிடுகிறார். "கடுமையான உழைப்பாளி. ஒரு வாரம் கூடத் தூங்காமல் இருந்து வேலை செய்வார்". புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்திற்காக வெளியூர்ப் படப்பிடிப்புக்குச் சென்றபோது பத்து நாள்கள் படப்பிடிப்பே நடைபெறவில்லை. புயலும் மழையுமாகப் பெய்ததால் படப்பிடிப்பு நடக்கவில்லை. பதினைந்து நாள்கள்தாம் வெளியூர்ப் படப்பிடிப்புத் திட்டம். மீதம் நான்கைந்து நாள்கள் சென்னைப் படப்பிடிப்புத் தளத்தில் ஒட்டுவேலைகளுக்கென்று செலவிடலாம். இவ்வளவுக்குத்தான் தயாரிப்பாளரால் இயலும். வெளியூர்ப் படப்பிடிப்பு கெட்டுப் போனதால் அந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கவே முடியாது. ஆனால், 'பேட்ச்வொர்க்' எனப்படுகின்ற பின்னொட்டுப் படப்பிடிப்பு நாள்களுக்குள்ளாகவே இராவும் பகலுமாய் அரங்கிற்குள்ளேயே படத்தை எடுத்து முடித்துக்கொடுத்திருக்கிறார் முத்துராமன். ஒரே நாளில் பத்துக் காட்சிகள் எடுத்தாராம். இரண்டாவது எடுப்புக்கே (டேக்) செல்லவில்லை. படம் குப்பையாக வந்துவிடுமோ என்று திரைக்கதை வசனம் எழுதிய பஞ்சு அருணாசலம் போன்றவர்களே அஞ்சியிருக்கிறார்கள். ஆனால், இறுதி வடிவத்தில் அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அயர்ந்துபோய்விட்டார்கள். அவ்வளவு சிறப்பாக வந்திருந்தது. படமும் வெற்றி. ஓர் இயக்குநரின் இந்தத் திறமையும் உழைப்புமே தயாரிப்பாளர்களைக் காப்பாற்றும். சந்தை மதிப்புடைய கலைஞர்களை உருவாக்கும்.


பிரியா திரைப்படத்திற்காகச் சிங்கப்பூர் சென்ற படப்பிடிப்புக் குழுவில் இரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றவர்களுக்குத்தான் விடுதியறைகள். மற்றவர்கள் தங்கிக்கொள்ள வாடகைக்கு வீடு எடுத்துக்கொள்ளப்பட்டதாம். "நான் விடுதியில் தங்கமாட்டேன், படப்பிடிப்புக் குழுவினருடனேயே தங்கிக்கொள்கிறேன்," என்று விடுதியறையை விடுவித்துக்கொண்டு வந்து சேர்ந்தவர் இரஜினிகாந்த். அரசு சார்ந்த இடங்களுக்கு மட்டும்தான் படப்பிடிப்புக் கட்டணமில்லை என்பதால் அத்தகைய இடங்களிலேயே படப்பிடிப்பு வைத்துக்கொள்ளப்பட்டதாம். வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்று பெருமையாகச் சென்றுவிட்டார்களே ஒழிய, ஒரே மகிழுந்தில் எழுவர் எண்மர் என்று புளிமூட்டையாய் அடைந்துகொண்டு படப்பிடிப்புப் பகுதிகளுக்குச் சென்றார்களாம். இத்தனைக்கும் அந்தப் படம் தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. எண்ணி எண்ணிச் செலவிட்டு எடுத்தால்தான் ஒரு வணிகப் படத்தைக்கூட முடிக்க முடியும். அதற்கு முத்துராமனைப் போன்ற இயக்குநர்கள் வேண்டும்.


ஓரிரண்டு படங்களை எடுத்த இளநிலை இயக்குநர்கள் என்னென்னவோ மிதமிஞ்சிப் பேசுகின்றார்கள். முத்துராமன் அதிர்ந்தோ கூடுதலாகப் பேசியோ எங்கும் பார்த்ததில்லை. இந்த அமைதி எங்கிருந்து வந்தது? அதுதான் அவர் வளர்ந்த இடம். ஏவிஎம் திரைப்படக் கூடத்தில் ஒரு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். திருலோகசந்தர் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்து படிப்படியாகக் கற்றவர். அவை அனைத்திற்கும் மேலாக எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி எண்ணற்ற பெருங்கலைஞர்களுடன் தம் திரைவாழ்க்கையில் ஒன்றாய்ப் பணியாற்றியவர். இரஜினிகாந்தின் இருபத்தைந்துக்கும் மேலான படங்களை இயக்கியமை. எல்லாமே வெற்றிப் படங்கள்.
பாண்டியன் என்ற திரைப்படத்திற்குப் பின்னர் அவர் படங்கள் இயக்குவதைக் குறைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு தமிழ்நாட்டரசு கேட்டுக்கொண்டமைக்காகவே 'தொட்டில் குழந்தை' என்ற படத்தை இயக்கினார். அறுபதாம் அகவையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதைப்போன்றே தம் ஓய்வுக் காலத்தை அமைத்துக்கொண்டார். பாண்டியன் படப்பிடிப்பு நடந்தபோது அவருடைய துணைவியார் இறந்துபோய்விட, போவினைக்காக ஒரேயொருநாள் சென்று அவர்க்குரிய இறுதிக்கடமை ஆற்றிவிட்டு மறுநாள் படப்பிடிப்புக்கு வந்துவிட்டாராம். சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கையிலும் இவ்வாறே ஒரு துயரம் நேர்ந்தது. 

அவர் இங்கிலாந்தில் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிக்கொண்டிந்தபோது அவரை ஓர் ஆட்டக்காரராக ஆக்கியளித்த தந்தையார் இறந்துபோனார். அப்போது இந்திய அணி சச்சினின் மட்டைப் பங்களிப்பையே பெரிதும் நம்பியிருந்தது. ஆடிக்கொண்டிருப்பது உலககோப்பைப் போட்டி. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவந்த தெண்டுல்கர் அடுத்த விமானத்திலேயே மீண்டும் இங்கிலாந்து திரும்பினார். அடுத்த போட்டியில் பங்கேற்று விளையாடினார். தொழிலதிபர் இந்துஜாவின் வாழ்க்கை வரலாற்று நூலிலும் இதுபோன்றே ஒரு நிகழ்வு வருகிறது. காலம் முழுவதும் தொழில் தொழில் என்று உலகம் சுற்றியவர் இனி என் ஒவ்வொரு நொடியும் என் மனைவிக்கே என்று முடிவெடுத்தபோது அவ்வம்மையார் இறந்துவிட்டார். தம் வாழ்நாள் முழுவதும் எதற்கும் நொடி நேரமில்லாமல் திரைப்படங்களே வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துராமனுக்கு மனைவி இழந்த துயரம் மனத்தைப் பிழிந்திருக்க வேண்டும். அது அவர் மனத்தைப் பெரிதும் வடுப்படுத்தியிருக்கலாம். அழுது மனந்தேற்றிக் கொள்வதற்குச் சிறுபொழுதில்லாத இது என்ன வாழ்க்கை என்று வெடிப்பான ஓர் அழுகையோ ஒரு துளிக்கண்ணீரோ அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கலாம். அந்த நொடியில் அவர் தம் ஓய்வு முடிவை எடுத்திருக்க வேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன்