Thursday 7 September 2017

நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை!

தமிழ்க் கலையுலகில் நாடக நடிகராக நுழைந்து, திரைப் படத்துறைக்குள் சாதாரண நடிகராக அடி வைத்து, 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விசி கணேசன் எனும் சிவாஜி கணேசன். 
 
 
 
 
பல்வேறு சவாலுக்குரிய வேடங்களை ஏற்று ஈடுஇணையற்ற முறையில் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி 'நடிகர் திலக'மாக ஜொலித்தவர் சிவாஜி கணேசன்.
 
அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். சிவாஜி, தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களை சரியான முறையில் உள்வாங்கி அந்த கதாபாத்திரத்தின் போக்குப்படி சிரிப்பது, நடப்பது, கோபப்படுவது, கண்ணீர் விடுவது என்று அனைத்தையும் தனது முகபாவங்களினாலும், உடல் அசைவுகளினாலும் அப்படியே செய்து காட்டுவதில் உலகத் திரைப்படக் கலைஞர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் முதன்மையானவர், நிகரற்றவர். 
 
 
 
 
சிவாஜிக்கு நடிப்பதற்கு கிடைத்த கதாபாத்திரங்களைப்போல் வேறு எந்த நடிகருக்கும் ஏன் இந்தியத் திரைப்பட அளவில் உள்ள எந்த கலைஞர்களுக்கும் அமையவில்லை. 
 
 'நவராத்திரி' படத்தில் அப்பாவியாக, முரடனாக, டாக்டராக, குடிகாரனாக, தொழுநோயாளியாக, விவசாயியாக, கூத்துக் கட்டுபவராக, காட்டிலாகா அதிகாரியாக, காவல்துறை அதிகாரியாக இப்படி ஒன்பது விதமான வேடங்களை எந்த விதமான கிராபிக்ஸ் வேலைகள் இல்லாமல், மேக்கப்பின் மூலம் எந்த மேஜிக்கும் செய்யாமல் ஒவ்வொரு வேடத்திற்கும் வெவ்வேறுவிதமான வேறுபாடுகளை காண்பித்து நடிப்பினால் மட்டும் வித்தியாசத்தை காட்டி நடித்து சாதனைப் புரிந்த ஒரே நடிகர் உலகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவர் தான் என்றால் அது மிகையான செய்தி அல்ல.
 
 
 

'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் நாடக நடிகராக அர்ஜீனன், நந்தனார், ஸ்ரீமுருகன், ஹரிச்சந்திரன், ஹாம்லட், பகவத்சிங், திவான்பகதூர், கிறிஸ்துமஸ் தாத்தா, கொடிக் காத்த திருப்பூர் குமரன் இப்படி ஒன்பதுவிதமான நாடகங்களில் ஒன்பது விதமான வேடங்களை ஏற்று நடித்து சிறப்பித்தவர் நடிகர் திலகம். 'தெய்வமகன்' படத்தில் அப்பா, பெரியமகன், சிறிய மகன் என்று மூன்று விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டி நடித்து படம் பார்த்தவர்களை பிரம்மிக்க வைத்தவர் நடிகர் திலகம். 
 
இதற்காக இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக முதன்முதலில் போட்டியில் கலந்துக் கொண்டது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். தேர்வுக் குழுவிலிருந்த பலரும், இந்த மூன்று வேடங்களையும் ஒரே நடிகர் நடித்தார் என்பதை முதலில் நம்பவில்லை. 
 
 
 
 
 'உத்தமபுத்திரன்' படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். 'கௌரவம்' படத்திலும் இரட்டை வேடத்தில் நடித்தார். 'மனிதனும் தெய்வமாகலாம்' படத்தில் ஆத்திகன் & நாத்திகன் என்று இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாட்டும் பரதமும்' படத்தில் பாட்டையும், பரதத்தையும் இணைக்கும் இருவிதமான கதாபாத்திரம். 'திரிசூலம்' படத்தில் தந்தை, மூத்தமகன், இளையமகன் என்று மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடிப்பும் மூன்றுவிதமாக இருந்தது. அதனால் படமும் ஹிட்டாகி வசூலையும் தந்தது.

'எமனுக்கு எமன்' படத்தில் எம தர்மராஜனாக, எதிர்க்கும் இளைஞனாக இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினார். 'வெள்ளை ரோஜா' படத்தில் புனிதமான கிறிஸ்துவ பாதிரியாராகவும், போலீஸ் அதிகாரியாகவும் மாறுபட்டட நடிப்பை வெளிப்படுத்தினார். 
 
'சந்திப்பு' படத்திலும் இரட்டை வேடமேற்றார். 'எங்க ஊர் ராஜா', 'என் மகன்', 'சிவகாமியின் செல்வன்', 'புண்ணியபூமி', 'விஸ்வரூபம்', போன்ற படங்களில் இரட்டை வேடமேற்று நடித்தார். 'பலே பாண்டியா' படத்தில் 3 வேடங்கள். 
 
ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட வேடமேற்று நடிகர் திலகம் சாதனைப் புரிந்தார். ஒரு வேடத்தை ஏற்றிருந்த படங்களிலும், ஒப்பற்ற நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நடித்தார். முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நடித்த சிவாஜி, 'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 
 
'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார்.
 
 
 
'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் எம்.ஜி.ஆருடன் இணைந்து வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார். 'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 
 
'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார். 'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 
 
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 
 
'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார். 'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார். 
 
'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார். 'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார்.
 
 
'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார். 'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார். 'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார்.
 
 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார். ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார். 
 
 
'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார். 
 
எண்பதுகளின் மத்தியில் தன் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் திலகம். அவற்றுள் முக்கியமானது 'முதல் மரியாதை' படத்தில் ஊரே மதிக்கும், ஆனால் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இழந்த ஊர்ப் பெருசு வேடம். சிவாஜின் வாழ்க்கையில் காவியப் படமாக நின்றது. நடிகர் திலகத்தின் நடிப்பும், இசைஞானி இளையராஜாவின் இசையும் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தன.
 
 
 ரஜினியுடன் ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் படங்களில் கவுரவ வேடங்களில் வந்தவர் ரஜினி. ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன் போன்ற படங்கள். எண்பதுகளில் ரஜினியின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் சிவாஜி. அவற்றில் முக்கியமானவை விடுதலை. படிக்காதவன். விடுதலை படத்தில் யாருக்கு முக்கியத்துவம், ரஜினிக்கா.. சிவாஜிக்கா? என இரு தரப்பு ரசிகர்களுக்குள் எழுந்த மோதலால் பெரும் கலவரமே ஏற்பட்டது .
 
தியேட்டர்களில். 'படிக்காதவன்' படத்தில் மீண்டும் ரஜினியுடன், அவரது பாசமிகு அண்ணனாக வந்தபோது அதே ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். வெள்ளி விழா கண்ட படம் அது. சிவாஜிக்கு கடைசி படமாக அமைந்தது ரஜினியின் படையப்பாதான். 
 
கமலுடன் சிவாஜி கணேசனின் நடிப்பு வாரிசு என்று அழைக்கப்படும் கமல் ஹாஸனுடனும் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் நடித்த அளவுக்கு இல்லை. இருவரும் இணைந்து நடித்தவை மூன்று படங்கள்தான். ஆரம்ப நாட்களில் நாம் பிறந்த மண் படத்தில் சிவாஜியின் வில்லத்தனம் கொண்ட மகனாக கமல் நடித்தார். பின்னர் சத்யம் படத்தில் சிவாஜியின் தம்பியாக கமல் நடித்திருப்பார். சிவாஜி - கமல் சேர்ந்து நடித்த மூன்றாவது படம் தேவர் மகன். சிவாஜிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். படத்தின் தரமும் சிவாஜி நடிப்பும் தேசிய விருதுக்கு மரியாதை சேர்த்தன என்றால் மிகையல்ல.
 
 'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. குறிப்பாக பசும்பொன் படத்துக்காக இன்னொரு தேசிய விருதே அவருக்குத் தந்திருக்க வேண்டும். 
 
இன்றைய தலைமுறை நடிகரான விஜய்யுடன் இணைந்து 'ஒன்ஸ்மோர்' படத்தில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி. 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும், 'பூப்பறிக்க வருகிறோம்' படத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மூத்தவராகவும் நடித்திருப்பார். 
 
இப்படி எண்ணிக்கையில் அடங்காத எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தலைச்சிறந்த கலைஞராக இன்றுவரையிலும் ஈடு இணையாற்றவராக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார். 
 
அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தால் தந்தை பெரியாரால் வி.சி.கணேசனாக இருந்தவர் சிவாஜி கணேசனாக்கப்பட்டார். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்து ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் கண்ணீர் விட்டு கதறினார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துவது போல் நடித்தீர்கள்' என்று சிவாஜியைப் பாராட்டினார். சிவாஜி படங்களை ரீமேக் செய்யும்போது 'சிவாஜி நடிக்கின்ற கதாபாத்திரங்களில் எங்களால் நடிக்க முடியாது' என்று இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் அனைத்து மொழிப் பட உலகைச் சேர்ந்த மாபெரும் கலைஞர்கள் அறிவித்தார்கள். 
 
இன்றைய கலைஞர்களுக்கு நடிப்பின் பெட்டகமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். மார்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இவரது படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். 'எங்களால் நம்பவே முடியவில்லை இப்படியெல்லாம் ஒருவரால் நடிக்க முடியுமா? அபாரம், அற்புதம் இதுபோன்று வேறு எவராலும் நடிக்க முடியாது. எங்களைப் போல் உங்களால் நடிக்க முடியும், உங்களைப் போல் எங்களால் நடிக்க முடியாது,' என்று ஆச்சரியப்பட்டு நடிகர் திலகத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். அவருடன் இணைந்து படமெடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.
 
 
சிவாஜியைப் பாராட்டிய மேலும் சில பிரபலங்கள்... 
 
தன்னுடைய கைவிரல் அசைப்பின் மூலமே நம்மையெல்லாம் கவர்ந்துவிட்ட சிவாஜிகணேசன் ஓர் உலகப் பெரு நடிகர்.
 
 - முதறிஞர் ராஜாஜி 
 
உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியமாகும். 
 
 - தந்தை பெரியார் 
 
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். நம் பாரத நாட்டிற்கு அவர் தம் நடிப்பின் மூலம் மகத்தான பெயரைத் தேடித் தந்திருக்கிறார். அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமையடைகிறது. பாரதத் தாய் பூரிப்படைகிறாள். 
 
 - பெருந்தலைவர் காமராஜர் 
 
 எனது திரைக்கதை, உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் என்றும் தமிழாக, தமிழ் உரை நடையாக வாழக்கூடியவர் எனது நண்பர் சிவாஜி கணேசன். 
 
- கலைஞர் மு. கருணாநிதி. 
 
 தமிழகம் பெருமைப்படும் வகையில், தனது திறமையின் மூலம் புகழ்பெற்று வாழ்பவர் அறிஞர் அண்ணா போற்றிய என் அன்புத் தம்பியான கணேசன். 
 
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 
 
சிவாஜியின் நடிப்பாற்றலை 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் இணைந்து நடிக்கும்போது பார்த்தேன், தலைச்சிறந்த கலைஞரோடு நான் நடித்தது எனது பாக்கியம். 
 
- என்.டி. ராமாராவ் 
 
 புதிய தலைமுறை நடிகர் நடிகையர் நடிப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் சிவாஜி அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே போதும். ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
 
- புரட்சித் தலைவி செல்வி. ஜெ.ஜெயலலிதா
 
 எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம். 
 
- ஏவிஎம் சரவணன்.


-பெரு துளசிபழனிவேல்

 


 




No comments:

Post a Comment