Saturday 10 June 2017

அஜித்-விஜய் படங்கள்ல இந்த அரிய விஷயங்களைக் கவனிச்சிருக்கீங்களா..?

தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்களான அஜித் - விஜய் படங்களை மறுக்கா மறுக்கா பார்க்கும்போது ஆச்சரியமான விஷயங்கள் சில தட்டுப்பட்டுச்சு. அவற்றை உங்களுக்காக இங்கே சொல்றேன் தல,தளபதியின் தம்பிமார்களே... ச்சிந்திக்கனும்...

ஆச்சரியம் - 1 :
விஜய்யின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் சிலர், பிறகு வளர்ந்து அவருக்கே தங்கையாக நடித்திருப்பார்கள். `வேலாயுதம்' படத்தில் விஜய்யின் ரத்தத்தின் ரத்தமாக நடித்த சரண்யா மோகன், `காதலுக்கு மரியாதை' படத்தில் வரும் `ஆனந்தக் குயிலின் பாட்டு...' பாடலில் சிறுமியாக வெள்ளை கவுன் அணிந்து ஆடிக்கொண்டிருப்பார். `கில்லி' படத்தில் விஜய்யின் தங்கை புவனாவாக நடித்த ஜெனிஃபர் தான் `நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனின் மகளாக நடித்திருப்பார். `ஜில்லா' படத்தில் விஜய்க்குத் தங்கையாக நடித்த நிவேதா தாமஸ் தான், `குருவி' படத்தில் குட்டித் தங்கையாக நடித்திருப்பார். இதேபோல், `கத்தி' படத்தில் `கம்யூனிஸம்னா என்னன்ணா?' என விஜய்யிடம் கேள்விக் கேட்டு இட்லி டயலாக் பேசவைத்தவர்தான் `ப்ரண்ட்ஸ்' படத்தில் சின்ன வயசு விஜய்யின் சின்ன வயசுத் தங்கையாக நடித்தவர்.

ஆச்சரியம் - 2 :
அஜித்தும் த்ரிஷாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் `ஜி'. சைக்கிள் மணியை அடிச்சுப்புட்டு `டிங்டாங் கோயில் மணி'னு பாட்டுப்பாடி சந்தோஷமா காதல் வளர்ப்பாங்க. திடீர்னு எந்த கரப்பான்பூச்சி கண்ணுப்படுமோ தெரியல அஜித் ஜெயிலுக்குப் போயிடுவார். பல ஆண்டுகள் கழித்து ஆறு வார தாடியோட த்ரிஷாவை மறுபடியும் வந்து பார்ப்பார். அதோட படத்தை முடிச்சுடுவாங்க. இதுதான், இது மட்டும்தான் இந்த ஜோடி கடைசியா சேர்ந்த படம். இதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிச்ச எந்தப் படத்திலேயும் ஒண்ணுசேரவே இல்லை. அவ்வ்வ்... `கிரீடம்' படத்தில் த்ரிஷாவோட அப்பா காதலை முடிச்சுவிட்ருவார். `மங்காத்தா' படத்தில் த்ரிஷாவின் அப்பாவை காரில் இருந்து தள்ளிவிட்டு அஜித்தே முடிச்சு விட்ருவார். கடைசியா நடிச்ச `என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் விக்டர் பயபுள்ள, கர்ச்சீஃபை முகத்தில் கட்டிவந்து முடிச்சு விட்ரும்.


ஆச்சரியம் - 3 :
விஜய் நடித்த சில படங்களின் டைட்டில்களை, அவர் அதற்கு முன் நடித்த படங்களில் பேசிய பன்ச் வசனத்தில் இருந்து தொக்காகத் தூக்கியிருப்பார்கள். `திருமலை' படத்தில் பக்கம் பக்கமாய் பன்ச் டயலாக்குகள் பேசியிருப்பார் விஜய். அதில் `ஆட்டம், கோதா, போட்டி, பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் கில்லி கில்லி மாதிரி...' என வசனம் பேசுவார். `கில்லி'னு ஒரு படம் ரிலீஸாகி சரித்திரத்தில் இடம் பிடிச்சுச்சு. `குருவி' படத்தில் `காடுன்னா நான் சிங்கம், வானம்னா இடி, கடல்னா சுறா, காத்துனா சூறாவளி... சும்மா சுத்தி சுத்தி அடிக்கும்...' என வசனம் பேசுவார், `சுறா'னு ஒரு படம் ரிலீஸ் ஆகி அதுவும் சரித்திரத்தில் இடம் பிடிச்சுச்சு. இதேபோல், ஒரு படத்தில் `நீ கேடினா; நான் ஜில்லா கேடிடா...'னு வசனம் பேசுவார், `ஜில்லா'னு படம் வந்துச்சு. `கத்தி' படத்தின் போஸ்டர்களில் `தெறி வெற்றி' என கேப்ஷன் கொடுத்தார்கள், `தெறி'னும் ஒரு படம் வந்துச்சு.

ஆச்சரியம் - 4 :
விஜய், தான் நடித்த படங்களில் இருந்தே டைட்டில்களை தூக்குவது போல, அஜித்தும் விஜய் நடித்த படங்களில் இருந்தே சில நேரங்களில் டைட்டில்களைத் தூக்கியிருக்கிறார். `காதலுக்கு மரியாதை' படத்தில் காடு, மலை, ஏரியெல்லாம் விஜய் சுற்றி வந்து பாடும் பாடல் `என்னைத் தாலாட்ட வருவாளா...'. இதே பெயரில் அஜித் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். `புலி' படத்தில் `நீங்கள்லாம் வேதாளம், நாங்க பாதாளம்...' என விஜய் வசனம் சொல்வார். `வேதாளம்' என அஜித் படம் வந்தது. `சுறா' படத்தில் கடலில் காணாமல் போன விஜய்யைப் பற்றி, கரையில் நின்றுகொண்டு ஒருவர் கலெக்டரிடம் விவரிப்பார். அப்போது `வீரத்துல ஆயிரம் வேங்கைக்குச் சமம். விவேகத்துல லட்சம் சாணக்கியனுக்குச் சமம்' எனச் சொல்வார். `வீரம்' வந்துருச்சு, `விவேகம்' வரப்போவுது ப்ரோ..!

இப்பவாச்சும் புரியுதா... தலயும் தளபதியும் ஒண்ணு.... டீக்கடையில நின்னு... திண்ணு பாரு பன்னு..!